கந்தகக் கனவுகள்
= = = = = = = = = =
விதிப்புயலால்
வேரோடு சாய்க்கப்பட்ட
வாழைக் க...ன்றுகள்
நாங்கள்!
கனவினில் கூட
கல்வியைக் காணமுடியவில்லை
கந்தக மணத்தில் எங்கள்
கனவுகள் களவாடப்படுகின்றன!
வான்நோக்கி
கையுயர்த்தித் தொழுகின்ற
வாய்ப்பும் வரவில்லை!
வெடித்துச் சிதறுகிற
நெருப்புத்துளிகள் யாவும்
எங்கள்
சிவகாசிச் சிறுவர்களின்
வியர்வைத்துளிகளாய்....
பிஞ்சுவிரல்கள் யாவும்
நஞ்சுகள் குடிகொள்ள
விழிகளில் வழியும்
ஈரத்தால் நஞ்சுகள்
நமுத்தே போகின்றன!
வாழ்வை இழந்து
வசதி பொறுக்குகின்ற
இளம் சருகுகளாய்
சாய்கின்றோம்.....
எரிந்து கிடக்கும்
காகிதக் குப்பைகளில்
கிழிந்து கிடக்கும்
எங்கள் முகங்கள்!
எரிந்து கருகும்
மத்தாப்புகளின் வெளிச்சத்தில்
எரிந்து கொண்டிருக்கிறது
எங்கள்வீட்டு அடுப்புகள்!
அவதாரம் எடுத்தால்தான்
ஆண்டவன் கையில்
சங்குச்சக்கரம் - ஆனால்
சங்குச்சக்கரத்தை
சுற்றுவதற்கே நாங்கள்
அவதாரம் எடுத்திருக்கின்றோம்....!!
மற்றவர்கள்
மத்தாப்பு எரித்து
தீபாவளியை தீர்(ய்)க்கின்றனர்...!!
நாங்களோ
மத்தாப்பை திரித்து
எங்களை தீய்(ர்)க்கின்றோம்...!!
கந்தகத்தின் மூலம்
கண்ணியமாய்
காலனுக்குத் தூதனுப்பி
கவுரவமாய் கண்மூடியவர்கள்
நாங்கள்..!!
ஆண்டுக்கு ஒருமுறை
வீதிகளில் விசப்புகையும்
வெளிச்சமும், சத்தமும்.....
என்றால்
ஆண்டாண்டும் எங்களின்
விழிகளில் விசப்புகை
வாழ்விலோ இருள்
இதயத்திலோ இரைச்சல்!
இங்கு
எங்களுக்கான
விதி கண்மூடிதவமிருக்கிறது!
விழித்தால் விடியல்....!!
- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact