Friday 14 October 2011

ஜனனமும் மரணமும்


பிரேம லதா

இருளில் நிலவொளி நேரம்
விண்ணில் விண்மீன்கள்
விசாலமாய் விரிந்திருக்க
இதயமோ சுருங்கிய நிலையில்

நெருஞ்சி முள்ளான படுக்கையில்
நெருப்பாய் எரிந்தபடியே...
நெஞ்சோரப் பாரம் நீங்காமல் நிற்க
கண்ணோர சோகம் கலந்தே தான் கரைய

நீ காதலினால் கசிந்துருகிய கவிதைகளை
கண்ணீர்க் கண்களோடு கடக்கின்றேன்
உன் திருவடி தேடியபடியே...
என் கவியடி கலங்கியபடியே...

உன் பார்வையின் ஒளியில் பிறக்கின்றேன்
உன் வார்த்தையின் ஒலியில் இறக்கின்றேன் -
அதனால்
உன்னால் மட்டுமே எனக்கு எப்போதும்
ஜனனமும் மரணமும் கொடுக்க முடியும்

என் மன வானில் பௌர்ணமியாய் நீ...
உன் நிலையற்ற அன்பில் தேய்பிறையாய் நான்..
நதியின் வேகமாய் உன் காதல் - அது
சதியின் வேகமாய் அழிந்த நிலையில்...

இளமைத் தோட்டத்தில் இனிமை காட்டினாய்
காதல்த் தோட்டத்தில் கல்லறையும் கட்டினாய்
பனித்திரை நிறைந்த உனது பாசத்தில் - உன்
முகத்திரை கிழிந்ததில் உறைகின்றேன்...!

அன்பே...
கடலுக்குள் இருக்கும் உயிருக்கும்
தாகம் இருக்கும் - உணராயோ??
உன் இயலாமைக்கு என் காதலை எரிக்காதே..!
என் பிறப்பே உனக்கானது மறுக்காதே..!

உன் நேசம் கிடைக்க - நான்
என் சுவாசம் இழப்பேன்....- நான்
மரித்துச் சென்றாலும் உனை
வருத்திச் செல்ல மாட்டேன்...

No comments:

Post a Comment

 
;